சனி, 21 நவம்பர், 2009

ஒரு மழையும் சில முத்தங்களும் .......


ஒரு சாயந்திர பொழுது;
புது தாவணி பாவாடை போட்டு ஸ்டைல் காண்பித்தாய்
குட்ட பாப்பா என்றேன்
சட்டென்று அருகில் வந்து கால்நெக்கி சொன்னாய்:
''தோளுக்கு மேல இருக்கேன் இது போதும்.''

மிடுக்காய் கால் மேல் கால் போட்டு
புது கொலுசை நான் பார்க்க ஆட்டிக்கொண்டே இருந்தாய்
ஒரு செவ்வாகிழமை.
கூர்ந்து பார்த்த நான் சொன்னேன் 'விரல் நீளம் வீட்டிற்கு அடங்கமாட்டாய்'
எழும்பி நின்று என் பாதம் மேல் உன் பாதம் வைத்து சொன்னாய்
''பாரு உன்னவிட சின்னதுதான். அடங்குடா''

நெருக்கடியான ஒரு பஸ் பேருந்தில்
என் கைவிரல் பற்றி உன்விரல் மேல் வைத்து
மருதாணியிட்ட உன் நீள நகத்தைம் என் நகத்தையும் பார்த்து சொல்லிக்கொண்டே இருந்தாய்;
'தோத்தானி தோல்புடிங்கி, தோத்தானி தோல்புடிங்கி......"

யாருமே வரவில்லை கடையில்
அவள் விகடனில் கேரட் அல்வா செய்வது எப்படியில் மூழ்கி இருந்தாய்
உன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தேன் ரெம்ப நேரம்.
பக்கம் திருப்புகையில் என்ன என்றாய் என் கண் நோக்கி.
கேட்டேன்: ''உன் உதடு என் உதடை விட கொஞ்சம் பெருசோ ?''
வெளியே இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது.

வே.சசிவரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக